ஐபிஎல் 2024: விதி மீறியாதாக விராட் கோலிக்கு அபராதம்!

Updated: Mon, Apr 22 2024 19:30 IST
ஐபிஎல் 2024: விதி மீறியாதாக விராட் கோலிக்கு அபராதம்! (Image Source: Google)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களையும், பில் சால்ட் 48 ரன்களையும் சேர்த்தனர். 

பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணி இறுதிவரை போராடிய நிலையில் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. இதில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 55 ரன்களையும், ராஜத் பட்டிதார் 52 ரன்களையும் சேர்த்திருந்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் நரைன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவுசெய்துள்ளதுடன், புள்ளிப்பட்டியலிலும் கடைசி இடத்தில் தொடர்கிறது. இந்நிலையில் இப்போட்டியின் போது விராட் கோலி ஆட்டமிழந்த விதம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஏனெனில் இந்த போட்டியின் போது மூன்றாவது ஓவரை வீசிய ஹர்ஷித் ரானா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்தார் விராட் கோலி.

ஆனால் அந்த பந்து விராட் கோலியின் இடுப்பு பகுதிமேல் புல்டாஸாக சென்றதால் உடனடியாக விராட் கோலியும் மூன்றாம் நடுவரிடம் முறையிட்டார். அதனை சரிபார்த்த மூன்றாம் நடுவர் சோதனையில் விராட் கோலி க்ரீஸை விட்டு நிற்பது, பந்து அவரது இடுப்பு பகுதிக்கு மேல் இருப்பதும் தெளிவாக தெரிந்தது. ஆனால் மூன்றாம் நடுவர் விராட் கோலி க்ரீஸை விட்டு வெளியே நின்ற காரணத்தால் கணிப்பின் படி பந்து அவரது இடுப்பு பகுதிக்கு கீழ் சென்றதாகவும், இதனால் விராட் கோலி அவுட் என்று தீர்ப்பு வழங்கினார்.

 

இதனை சற்றும் எதிர்பாராத கோலி விரக்தியில் கள நடுவர்களிடம் சில வார்த்தைகளை ஆவேசமாக பேசிய படி களத்தை விட்டு வெளியேறினார். அதனைத்தொடர்ந்து போட்டி முடிந்த பின்னரும் நடுவர்கள் விராட் கோலியிடம் தங்களது முடிவு குறித்து விளக்கினர். இந்நிலையில் களத்தில் நடுவர்களிடம் ஆவேசமாக நடந்துகொண்டதற்காக விராட் கோலிக்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஐபிஎல் நடத்தை விதி 2.8-ன் கீழ் விராட் கோலி முதல் நிலை குற்றத்தைச் செய்துள்ளார். மேலும் அவர் நடுவர் அளித்துள்ள குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளதுடன், அவருக்கான அபராதத்தையும் ஏற்றுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் தவறான தீர்ப்புகளை வழங்கும் நடுவர்களுக்கு ஏன் இதுபோன்ற அபராதம் விதிக்கப்படுவதில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை