ஐபிஎல் 2024: சதமடித்து மிரட்டிய விராட் கோலி; ராஜஸ்தான் அணிக்கு 184 ரன்கள் இலக்கு!
இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். முதலில் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், பின்னர் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களையும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் இப்போட்டியில் 100 ரன்களைத் தாண்டியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 44 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் விராட் கோலி ஒருமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் சௌரவ் சௌகானும் 9 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
ஆனாலும் தொடர்ந்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 67 பந்துகளில் தனது 8ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் சதமடித்து அசத்திய முதல் வீரர் எனும் பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 12 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 113 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.