ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா நியமனம்!

Updated: Sat, May 18 2024 19:54 IST
Image Source: Google

 

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாளை மாலை நடைபெறும் 69ஆவது லீக் ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், இரண்டாம் இடத்தை பிடிக்க இந்த போட்டியில் வெற்றிபெறுவது அவசியமாகும்.

அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் தொடரை வெற்றியுடன் முடிக்க முனைப்பு காட்டும். இதனால் இப்போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஷிகர் தவான் வழிநடத்திய நிலையில் காயம் கரணமாக அவர் பெரும்பாலான போட்டிகளை தவறவிட்டார். 

இதனையடுத்து இரண்டாம் பாதி ஐபிஎல் தொடரில் சாம் கரண் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தினார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் தொடரில் பங்கேற்பதற்காக தாயகம் திரும்பியுள்ளனர். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடி வந்த சாம் கரண், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் உள்ளிட்ட வீரர்கள் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு இங்கிலாந்து திரும்பியுள்ளனர். 

இதனால் நாளைய சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில் நாளைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னரே ஜித்தேஷ் சர்மா பஞ்சா கிங்ஸ் அணியின் துணைக்கேப்டானாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய ஜித்தேஷ் சர்மா, “முன்பைவிட தற்போது எங்கள் அணியின் வீரர்கள் பாஸிட்டிவாக உள்ளனர். ஏனெனில் இனியும் நாங்கள் இழப்பதற்கு இத்தொடரில் எதுவும் இல்லை. இத்தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்படவேண்டிய நிலையில், எங்களால் அதனை சரிவர செய்யமுடியவில்லை. ஆனாலும் நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினோம் என்று நம்புகிறேன். சீசன் முழுவதும் நாங்கள் வெற்றிக்காக கடுமையாக முயற்சித்துள்ளோம்.

அதிலும் ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா ஆகியோர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஹர்ப்ரீத் பிரார், பிரப்ஷிம்ரன் சிங் ஆகியோரும் சிறப்பான ஃபார்மில் இருந்துள்ளனர். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அனிஅத்தும் ஒரு நொடியில் மாறிவிடும். எங்களுக்கு சில அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஐபிஎல் தொடரில் பயமற்ற கிரிக்கெட்டுக்கு பிரபலமானது.

அதனால் எங்களுடைய கடைசி ஆட்டத்தில் நாங்கள் இன்னும் பயமின்றி எங்களது விளையாட்டை விளையாடுவோம். அதிலும் இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாடுவோம்” என்று தெரிவித்துள்ளார். நாளைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரைலீ ரூஸோவ் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் மட்டுமே வெளியாட்டு வீரர்களாக விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை