தொடர் முழுவதும் இதுபோன்று விளையாடாதது வருத்தமளிக்கிறது - கேஎல் ராகுல்!

Updated: Sat, May 18 2024 14:01 IST
Image Source: Google

மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார், 

அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 28 ரன்களிலும், தீபக் ஹூடா 11 ரன்களிலும் விக்கெடை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் கேப்டன் கேஎல் ராகுலுடன் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தினர். 

அதன்பின் 75 ரன்களில் நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை இழக்க, 55 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுலும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயூஷ் பதோனி 22 ரன்களையும், குர்னால் பாண்டியா 12 ரன்களையும் சேர்க்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களைச் சேர்த்தது. மும்பை தரப்பில் நுவான் துஷாரா, பியூஷ் சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - டெவால்ட் பிரீவிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெவால்ட் ப்ரீவிஸ் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த ரோஹித் சர்மாவும் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, நெஹால் வதேரா ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் - நமன் தீர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய நமன் தீர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 ரன்களைச் சேர்த்த நிலையிலும், மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், “இப்போட்டியில் வெற்றிபெற்றாலும், எங்களுக்கு ஏமாற்றமாகவே உள்ளது. இந்த சீசனின் தொடக்கத்தின் போது எங்களிடம் வலுவான அணி இருப்பதாகவும், அனைத்து விதத்திலும் நாங்கள் சிறப்பான அணியாகவும் உள்ளதாக நினைத்தோம். வீரர்களுக்கு காயம் ஏற்படுத்து என்பது இயல்பான ஒன்று தான். ஆனால் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. 

இன்றைய போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இதுப்போன்று தான் நாங்கள் தொடர் முழுவதும் விளையாட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எங்களால் அதனை செய்யமுடியவில்லை. இருப்பினும் எங்கள் அணி வீரர்களை நினைத்து நான் பெருமையடைகிறேன். எங்கள் அணியின் இளம் வீரர்கள் மயங்க் யாதவ் மற்றும் யுத்வீர் சிங் ஆகியோரை மோர்னே மோர்கலுடன் பயிற்சி மெற்கொள்ள தென் ஆப்பிரிக்காகவுக்கு அனுப்பிவைத்தோம்.

அதேசமயம் தற்போது அதிகபடியான டி20 கிரிக்கெட் போட்டிகள் இல்லை. எனது சொந்த பேட்டிங் மற்றும் இந்திய அணிக்கு திரும்புவதற்கான வேலைகளை நான் மேற்கொள்ள வேண்டும். அதனால் நான் மிடில் ஆர்டர் அல்லது டாப் ஆர்டரில் தொடர்ந்து சிறப்பாக விளையாட பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளேன். தற்போது நான் உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை என்றாலும், ரோஹித் சர்மாவுக்கும் இந்திய அணிக்கு எனது ஆதரவை தெரிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை