ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சமநிலை குறித்து ஆகாஷ் சோப்ரா கேள்வி!

Updated: Tue, Mar 18 2025 12:58 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. 

அதிலும் இந்த முறை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த இரு சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ராயல்ஸ் அணியும் பார்க்கப்படுகிறது. இதற்காக அந்த அணி வீரர்கள் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் 2025க்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அமைப்பு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கவலைகளை எழுப்பியுள்ளார், மெகா ஏலத்திற்குப் பிறகு அணி தன்னை பலவீனப்படுத்திவிட்டதா? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார். ஏனெனில் அந்த அணி வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஜோஸ் பட்லர், டிரென்ட் போல், யுஸ்வேந்திர சஹால், அஸ்வின் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை விடுவித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், “அவர்கள் தங்கள் மிகப்பெரிய நான்கு வீரர்களை இழந்தனர், ஆனால் தற்போது தேர்வு செய்திருக்கும் மாற்று வீரர்கள் அவர்களுக்கு அருகில் கூட இல்லை. ஷிம்ரான் ஹெட்மையர் தவிர்த்து, அந்த அணி முற்றிலும் இந்திய பேட்டிங் வரிசையை நம்பியுள்ளது. ஏனெனில் அவர்கள் எந்த வெளிநாட்டு பேட்ஸ்மேனையும் தேர்வு செய்யவில்லை, இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

பெரும்பாலான அணிகளில் வலுவான ஆல்-ரவுண்டர் உள்ளனர், அவர்கள் அணியில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்துகின்றனர். ஆனால் கடந்த ஆண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அந்த சலுகை இல்லை. இந்நிலையில் அவர்கள் மீண்டும் அதே தவறை செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் வநிந்து ஹசரங்கா ஒரு ஆல் ரவுண்டராக ஏற்றுகொள்ள முடியாது. அவர் பந்துவீச்சில் சிறப்பாக செய்துள்ள நிலையிலும், பேட்டிங்கில் அவர் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவராக இல்லை.

இதுதவிர்த்து ஜோஃப்ரா ஆர்ச்சரின் சமீபத்திய ஃபார்ம் மற்றும் காயங்கள் அவரை ஆபத்தான பந்தயமாக ஆக்குகின்றன. அவர் சிறப்பாக செயல்படவில்லை என்றால், ராஜஸ்தான் பெரிய சிக்கலில் சிக்கக்கூடும்” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியது போல் ராஜஸ்தான் அணியானது சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோரை ஏலத்திற்கு முன்னதாகவே தக்கவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், சந்தீப் சர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், நிதிஷ் ராணா, துஷார் தேஷ்பாண்டே, சுபம் துபே, யுத்வீர் சரக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, வைபவ் சூர்யவன்ஷி, குவேனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் சர்மா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை