நவம்பர் இறுதியில் ஐபிஎல் ஏலம்; இம்முறை ரியாத்தில் நடத்த பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெrறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியீடுவதற்கு அக்டோபர் 31ஆம் தேதியே கடைசி நாள் என பிசிசிஐ கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்,கேகேஆர் உள்ளிட்ட அணிகள் 6 வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், பஞ்சா கிங்ஸ் அணி 2 வீரர்களை மட்டுமே தக்கவைப்பதாக அறிவித்துள்ளது.
அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் 5 வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது மூன்று வீரர்களையும், பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டு வீரர்களையும் மட்டுமே தக்வைத்துள்ளன. இதனால் எதிவரும் வீரர்கள் ஏலத்தில் ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இதுதவிர்த்து, இந்த ஏலத்தில் அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது 110.5 கோடியுடனும், குறைந்தபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ரூ.41 கோடியுடனும் பங்கேற்க இருக்கின்றன. மேலும் ஆர்சிபி அணி 83 கோடியுடனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 73 கோடியுடனும், லக்னோ, குஜராத் அணிகள் தலா 69 கோடியுடனும், கேகேஆர் அணியானது 51 கோடியுடனும், மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா 45 கோடியுடனும் இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் வீரர்களுக்கான மெகா ஏலம் எதிர்வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்த ஏலத்திற்கான இடம் மற்றும் தேதியை இறுதி செய்ய அதிகாரிகள் அங்கு சென்றுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.