ஐபிஎல் 2025: ராயல்ஸுக்கு 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சூப்பர் கிங்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 62ஆவது லீக் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே மற்றும் ஆயூஷ் மாத்ரே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய டெவான் கான்வே 10 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய உர்வில் படேல் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து யுத்விர் சிங் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஆயூஷ் மாத்ரே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இணை அதிரடியாக விளையாடுயதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அதன்பின் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயூஷ் மாத்ரே 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் 13 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த டெவால்ட் பிரீவிஸ் மற்றும் ஷிவம் தூபே இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், 6ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இணைந்த ஷிவம் தூபே - எம் எஸ் தோனி இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இறுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் கேப்டன் எம் எஸ் தோனியும் 16 ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் யுத்விர் சிங் மற்றும் ஆகாஷ் மத்வால் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.