ஐபிஎல் 2025: டூ பிளெசிஸ், ஸ்டார்க் அபாரம்; சன்ரைசர்ஸ் வீழ்த்தியது கேப்பிட்டல்ஸ்!

Updated: Sun, Mar 30 2025 19:49 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்ச் செய்வதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடிய நிலையில், மறுபக்கம் அபிஷேக் சர்மா ஒரு ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷான், நிதீஷ் ரெட்டி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து அதிரடியாக தொடங்கிய டிராவிஸ் ஹெட்டும் 22 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 37 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த அனிகெத் வர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசி ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதன் மூலம் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 32 ரன்களைச் சேர்த்த நிலையில் கிளாசென் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அபினவ் மனோகரும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அனிகேத் வர்மா தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அதன்பின் சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்திய அனிகேத் வர்மா 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து பாட் கம்மின்ஸ், வியான் முல்டர், ஹர்ஷல் படேல் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேற்கொண்டு குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய அபிஷேக் போரலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபாஃப் டூ பிளேசிஸ் 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய கையோடு, 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 50 ரன்களுடன் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய கேஎல் ராகுலும் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபிஷேக் போரல் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 16 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை