ஐபிஎல் 2025: கேஎல் ராகுல் அதிரடி; ஆர்சிபியை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!

Updated: Thu, Apr 10 2025 23:07 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டதுடன் முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த பில் சால்ட் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்த நிலையில் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய தேவ்தத் படிக்கலும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் 4 ரன்களிலும், ஜித்தேஷ் சர்மா 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ராஜத் பட்டிதர் - குர்னால் பாண்டியா இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படிதர் 25 ரன்களில் நடையைக் கட்டினார். 

அவரைத்தொடர்ந்து குர்னால் பாண்டியாவும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தா டிம் டேவிட் இரண்டு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 37 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 7 ரன்களில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்கும் விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் போரலும் 7 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 30 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சமயத்தில், அடுத்து களமிறங்கிய கேப்டன் அக்ஸர் படேலும் 15 ரன்களில் நடையைக் கட்டினார். 

இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் மீதான அழுத்தமும் அதிகரித்தது. அதன்பின் இணைந்த கேஎல் ராகுல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அதன்பின் ஆட்டத்தின் இடையே மழை பெய்த காரணத்தால் இப்போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டது. அதனை உணர்ந்த கேஎல் ராகுல் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

அதுமட்டுமில்லாமல் இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேஎல் ராகுல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 93 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 38 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ச்சியாக 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கும் முன்னேறியது. 

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை