ஐபிஎல் 2025: ரிங்கு சிங் போராட்டம் வீண்; கேகேஆரை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ரம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மாற்றொரு தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவருடன் இணைந்த நிக்கோலஸ் பூரனும் சிக்ஸர்களை பறக்கவிட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 81 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
பின்னர் அப்துல் சமத் 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் பூரன் 7 பவுண்டரிகளையும், 8 சிக்ஸர்களையும் விளாசியதுடன் 87 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 238 ரன்களைக் குவித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் ஹர்ஷித் ரானா 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், ஆண்ட்ரே ரஸல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 37 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குயின்டன் டி காக் 15 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் அஜிங்கியா ரஹானேவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயரத்தொடங்கியது. இதில் சுனில் நரைன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த அஜிங்கிய ரஹானே 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அவருக்கு துணையாக வெங்கடேஷ் ஐயரும் பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. பின் 8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 61 ரன்களில் அஜிங்கியா ரஹானே தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயரும் 45 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் ஆண்ட்ரே ரஸல், ரமந்தீப் ஆகியோரும் சோபிக்க தவறினர்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் அதிரடியாக விளையாடி வந்த ரிங்கு சிங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களைச் சேர்த்த நிலையிலும், கேகேஆர் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. லக்னோ அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆகாஷ் தீப், ஷர்தூல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.