ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை 166 ரன்னில் சுருட்டியது சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 30ஆவது ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இன்றைய போட்டிக்கான லக்னோ அணியின் லெவனில் மிட்செல் மார்ஷும், சிஎஸ்கே அணியின் லெவனில் ஷேக் ரஷீத், ஜேமி ஓவர்டன் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். இதையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஐடன் மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஐடன் மார்க்ரம் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரரும், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களைக் குவித்தவருமான நிக்கோலஸ் பூரன் 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் லக்னோ அணி 23 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த மிட்செல் மார்ஷ் மற்றும் கேப்டன் ரிஷப் பந்த் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மிட்செல் மார்ஷ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆயூஷ் பதோனி அதிரடியாக விளையாடியதுடன் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் ரிஷப் பந்துடன் இணைந்த அப்துல் சமத் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் ரிஷப் பந்த் 42 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இறுதியில் 2 சிக்ஸர்களுடன் 20 ரன்களைச் சேர்த்திருந்த அப்துல் சமத் விக்கெட்டை இழக்க, அடுத்த பந்திலேயே 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 63 ரன்களைச் சேர்த்திருந்த ரிஷப் பந்தும் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களைச் சேர்த்தது. சிஎஸ்கே அணி தரப்பில் மதீஷா பதிரானா 2 விக்கெட்டுகளைக் கைபற்றினார்.