ஸ்லோ ஓவர் ரேட்; ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம்- பிசிசிஐ அதிரடி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
அதேசமயம் ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களை ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலிலும் மும்பை இந்தியன்ஸ் அணி 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியனுக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பந்துவீச அதிக நேர எடுத்துக்கொண்டதன் காரணமாக அந்த அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அபராதம் விதிக்கப்பட்ட முதல் அணியின் கேப்டன் எனும் மோசமான சாதனையும் ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.
முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக, அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை ஹர்திக் பாண்டியா தவறவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மும்பை அணி மீண்டும் அதே தவறை செய்துள்ளது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 38 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 39 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்ஷன் 63 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்த்தது. மும்பை இதரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் 48 ரன்களையும், திலக் வர்மா 39 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கத் தவறினர். இதனால் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.