ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கஸான்ஃபர்; மாற்று வீரரை அறிவித்தது மும்பை இந்தியன்ஸ்!

Updated: Sun, Feb 16 2025 20:50 IST
Image Source: Google

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு முன்னதாக நடைபெற்ற வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் போட்டிபோட்டு வீரர்களைத் தேர்வு செய்துள்ளனர். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக தனது அணியில் பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. ஏனெனில் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணியானது ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கஸான்ஃபரை ரூ.4.80 கோடிக்கு ஏலத்தில் வாங்கி இருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் மீது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தது. 

இத்தகைய சூழ்நிலையில் தான் சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே தொடரின் போது அல்லா கசான்ஃபர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேற்கொண்டு அவர் தனது காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது 4 மாத காலம் ஆகும் என்பதால், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து அல்லா கஸான்ஃபர் விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கான மாற்று வீரரைத் தேர்வு செய்யும் முயற்சியில் மும்பை அணி இறங்கியது. 

இந்நிலையில் எதிவரும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளதால் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. முன்னதாக நடந்து முடிந்த வீரர்கள் ஏலத்தின் போது முஜீப் உர் ரஹ்மானை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. 

முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக ஒப்பந்தமான முஜீப் உர் ரஹ்மான் காயம் காரணமாக அத்தொடரில் இருந்து விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக அல்லா கஸான்ஃபரை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்திருந்தது. இருப்பினும் அத்தொடரில் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது கஸான்ஃபருக்கு பதிலாக முஜீப் உர் ரஹ்மான் தேர்வாகியுள்ளார். 

ஐபிஎல் தொடரில் இதுவரை 19 போட்டிகளில் விளையாடியுள்ள முஜீப் உர் ரஹ்மான் அதில் 19 விக்கெட்டுகளை கைப்பறியுள்ளார். இதுதவிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணிக்காக இதுவரை 49 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் நடந்து வரும் டி20 லீக் தொடரில் விளையாடி வரும் முஜீப் உர் ரஹ்மான் 256 டி20 போட்டிகளில் 275 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரன் சர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், முஜீப் உர் ரஹ்மான்*, வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்யநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாத் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர், சூர்யகுமார் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை