ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 50ஆவது லீக் போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தியது.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் காயம் காரணமாக வநிந்து ஹசரங்கா மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் விளையாடாத நிலையில் ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா ஆகியோருக்கு லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களின் அரைசதங்களையும் பூர்த்தி செய்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 61 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரியான் ரிக்கெல்டன் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து, 9 பவுண்டரிகளுடன் 53 ரன்களைச் சேர்த்திருந்த ரோஹித் சர்மாவும் விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 48 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 48 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 217 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷ்னா, ரியான் பராக் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய வைபவ் சூர்யவன்ஷி 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய நிதீஷ் ரானாவும் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த கேப்டன் ரியான் பராக் - துருவ் ஜூரெல் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுப்பர்கள் என்று எதிர்பர்க்கப்பட்டது.
ஆனால் 16 ரன்கள் எடுத்திருந்த கையோடு ரியன் பராக்கும், அடுத்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் முதல் பந்திலேயும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து 15 ரன்களில் ஷுபம் தூபேவும், 11 ரன்கள் எடுத்த நிலையில் துருவ் ஜூரெலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டிய நிலையில், மஹீஷ் தீக்க்ஷனா, குமார் கார்த்திகேயா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இறுதியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஆறுதலளித்தார்.
Also Read: LIVE Cricket Score
இறுதியில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 30 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆர்ச்சரும் விக்கெட்டை இழக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் கரண் சர்மா மற்றும் டிரென்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறியுள்ளது. அதேசமயம் இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ளது.