ஐபிஎல் 2025: விதிகளை மீறியதாக கிளென் மேக்ஸ்வெல்லுக்கு அபராதம்!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக பிசிசிஐ ஆபராதம் விதித்துள்ளது. அதன்படி இப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் உபகரணங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஐபிஎல் நடத்தை விதிகள் 2.2 படி மைதானத்தில் உள்ள உபரணங்கள், அல்லது ஆடைகள், மைதான உபகரணங்கள் அல்லது சாதனங்களை சேதப்படுத்துவது குற்றமாகும்.
இதன் காரணமாக கிளென் மேக்ஸ்வெல்லிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு கரும்புள்ளியையும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளென் மேக்ஸ்வெல்லும் தனது குற்றத்தை ஓப்புக்கொண்டதன் காரணமாக, மேற்கொண்டு விசாரணைக்கு ஆஜராக தெவையில்லை என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. முன்னதாக இதே குற்றத்திற்காக குஜராத் டைட்டன்ஸின் இஷாந்த் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டொய்னிஸ், நேஹால் வதேரே, கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் பிரியான்ஷ் ஆர்யா சதமடித்ததுடன் 103 ரன்களையும், ஷஷாங்க் சிங் 52 ரன்களையும் சேர்க்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்களைக் குவித்தது.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே 69 ரன்களையும், ஷிவம் தூபே 42 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 36 ரன்களையும், இறுதியில் அதிரடியாக விளையாடிய எம் எஸ் தோனி 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, சிஎஸ்கே அணி 201 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.