ஐபிஎல் 2025: மாற்று வீரர்களை அறிவித்த பஞ்சாப், குஜராத், லக்னோ!

Updated: Thu, May 15 2025 21:03 IST
Image Source: Google

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

மேற்கொண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மே 24ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க இருந்தாலும் வெளிநாட்டு வீரர்கள் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குவதற்கு முன்பு பிசிசிஐ ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இப்போது வெளிநாட்டு வீரர்கள் இல்லாத நிலையில் அணிகள் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்றும், ஆனால் தற்போது தேர்வுசெய்யும் வீரர்களை அடுத்த ஏலத்திற்கு முன்பு தக்கவைக்க முடியாது என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடர் முடியும் வரை தற்காலிக மாற்று வீரர்களை அணிகள் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்றும் கூறிவுள்ளது. 

அந்தவகையில் பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மாற்று வீரர்களை அறிவித்துள்ளன. அதன்படி, நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக நியூசிலாந்தின் கைல் ஜேமிசனை ரூ.2 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ள காரணத்தால் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பெட்டர் குசால் மெண்டிஸை ரூ.75 லட்சத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் எஞ்சிய போட்டிகளில் அவர் லெவனில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

மேற்கொண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயமடைந்துள்ளதால் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகிவுள்ளார். முன்னதாக தொடரின் ஆரம்ப போட்டிகளையும் மயங்க் யாதவ் காயம் காரணமாக தவறவிட்டிருந்த நிலையில் தற்சமயம் மீண்டுக் காயத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நியூசிலாந்தின் வில்லியம் ஓ ரூர்க்கை ரூ.3 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read: LIVE Cricket Score

இதுதவிர்த்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடர்கள் காரணமாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர்கள் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவார்களா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இதனால் மேலும் சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகக்கூடும் என்பதால், அணிகள் அவர்களுக்கான மாற்று வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் இறங்கிவுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை