இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் - அஜிங்கியா ரஹானே!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முலான்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரப்ஷிம்ரன் சிங் 30 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 15.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேகேஆர் தரப்பில் ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணி எளிதான வெற்றியைப் பதிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸின் அபாரமான பந்துவீச்சின் காரணமாக அந்த அணி 15.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 95 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேற்கொண்டு இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில், இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் தானே ஏற்பதாக கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த போட்டி குறித்து விளக்க ஒன்றுமில்லை, அங்கே என்ன நடந்தது என்பதை நாங்கள் அனைவரும் பார்த்தோம். எங்களுடைய முயற்சியில் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அதனால் இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த போட்டியில் தவறான ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்தேன். மேற்கொண்டு அதற்கு நான் மேல்முறையீடு செய்யாமலும் இருந்தது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.
ஏனெனில் எனக்கு உறுதியாக தெரியாததன் காரணமாக நான் அந்த முடிவை எடுத்திருந்தேன். ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் மிகவும் மோசமாக பேட் செய்தோம், நாங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம். பந்து வீச்சாளர்கள் இந்த மேற்பரப்பில் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர், வலுவான பஞ்சாப் பேட்டிங் வரிசையை 111 ரன்களில் கட்டுப்படுத்தினர். ஒரு தனிநபராக, நீங்கள் இன்னும் நம்பிக்கையுடனும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும்.
Also Read: Funding To Save Test Cricket
இந்த போட்டியில் நாங்கள் பொறுப்பற்றவர்களாக இருந்தோம், முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் இது எங்களுக்கு எளிதான சேஸிங்காக இருந்திருக்க வேண்டும். அதனால் நான் முதலில் இந்த தோல்வியில் இருந்து என்னை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும், பின்னர் அணி வீரர்களிடம் என்ன சொல்வது என்று யோசிக்க வேண்டும். இன்னும் நேர்மறையாக இருக்க வேண்டும். தொடரில் இன்னும் பாதி மீதமுள்ளது. அதில் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.