ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸை 111 ரன்களில் சுருட்டியது கேகேஆர்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த பிரியன்ஷ் ஆர்யா 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 22 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ஜோஷ் இங்கிலிஸும் 2 ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனையடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மற்றொரு தொடக்க வீரரான பிரப்ஷிம்ரன் சிங் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல் 7 ரன்களிலும், நெஹால் வதேரா 10 ரன்களிலும், சூர்யன்ஷ் ஷெட்ஜ் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஷஷாங்க் சிங் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களுக்கும், அவருடன் இணைந்து விளையாடிய சேவியர் பார்ட்லெட் 11 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 15.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.