ஐபிஎல் 2025: நெஹால், ஷஷாங்க் அரைசதம்; ராயல்ஸுக்கு 220 டார்கெட்!
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரியான்ஸ் ஆர்யா 9 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அறிமுக வீரர் மிட்செல் ஓவன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து பிரப்ஷிம்ரனும் சிங்கும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த நெஹால் வதேரா மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்க்ளில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வதேராவுடன் இணைந்த ஷஷாங்க் சிங்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
Also Read: LIVE Cricket Score
இதில் அரைசதம் கடந்து அசத்திய நெஹால் வதேரா 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 70 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் அரைசதம் கடந்ததுடன் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 59 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 3 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், குவேனா மபாகா, ரியான் பராக், ஆகாஷ் மத்வால் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.