ஐபிஎல் 2025: சிஎஸ்கேவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா முதல் பந்தில் இருந்தே பவுண்டரிகளைப் பறக்கவிட்டு தொடக்கம் கொடுத்தார். ஆனால் மறுபக்கம் அணியின் மற்றொரு தொடக்க வீரரான பிரப்ஷிம்ரன் சிங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாடும் முனைப்பில் 9 ரன்களில் நடையைக் கட்டினார்.
மேற்கொண்டு மார்கஸ் ஸ்டொய்னிஸும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் தனது அதிரடியைக் கைவிடாத பிரியான்ஷ் ஆர்யா 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்த மிரட்டினார். இருப்பினும் மறுமுனையில் களமிறங்கிய நேஹால் வதேரா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓவரில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து பிரியான்ஷ் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்த ஷஷாங்க் சிங்கும் பவுண்டரிகளை விளாசிய நிலையில் பஞ்சாப் அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்துகொண்டே சென்றது.
இதில் ருத்ரதாண்டவமாடிய பிரியான்ஷ் ஆர்யா 39 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பூர்த்தி செய்து மிரட்டினார். அதன்பின் 7 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் என 103 ரன்களைக் குவித்த நிலையில் பிரியான்ஷ் ஆர்யா தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த மார்கோ ஜான்செனும் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாச, மறுபக்கம் ஷஷாங்க் சிங் தனது அரைசதத்தை பதிவுசெய்தார். மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52 ரன்களையும், மார்கோ ஜான்சென் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களையும் சேர்த்ததனர்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்ததுடன் 219 ரன்களையும் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் கலீல் அஹ்மத் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், முகேஷ் சௌத்ரீ, நூர் அஹ்மத் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ரச்சின் ரவீந்திரா 36 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் ஒரு ரன் மட்டுமே எடுத்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த டெவான் கான்வே மற்றும் ஷிவம் தூபே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.
மேற்கொண்டு இருவரும் இணைந்து 3ஆவது விக்கெட்டிற்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து டெவான் கான்வேவும் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 69 ரன்களைச் சேர்த்த கையோடு ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதனால் சிஸ்கே வெற்றிக்கு கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 27 ரன்களில் தோனி விக்கெட்டை இழக்க, சிஎஸ்கேவின் தோல்வியும் உறுதியானது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் லோக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளையும், கிளென் மேக்ஸ்வெல், யாஷ் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியதுடன், புள்ளிப்பட்டியலிலும் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.