ஐபிஎல் 2025:ஃபார்முக்கு திரும்பிய ஜெய்ஸ்வால்; பஞ்சாப் அணிக்கு 206 டார்கெட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். நடப்பு ஐபிஎல் தொடரில் ஃபார்மின்றி தடுமாறி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தார். அவருடன் இணைந்த சஞ்சு சாம்சனும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாட தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்திருந்த நிலையில், 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 67 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Also Read: Funding To Save Test Cricket
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதீஷ் ரானாவும் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் ரியான் பராக் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹெட்மையர் 20 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பராக் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களையும், துருவ் ஜூரெல் 12 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் தரப்பில் லோக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.