ஸ்லோ ஓவர் ரேட்; ரியான் பராக்கிற்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கௌகாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணியில் நிதீஷ் ரானா அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன், 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 81 ரன்களிலும், கேப்டன் ரியான் பராக் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் கலீல் அகமது, நூர் அகமது மற்றும் மதீஷா பதிரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 63 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அந்த அணியின் கேப்டன் ரியான் பராக்கிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், “மார்ச் 30, 2025 அன்று கௌகாத்தில் உள்ள ஏசிஏ மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கேவிர்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது.
Also Read: Funding To Save Test Cricket
இதன் காரணமாக அந்த அணி கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது அவரின் முதல் குற்றம் என்பதால் ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.22 இன் கீழ், குறைந்தபட்ச தொகையாக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக ஹர்திக் பாண்டியாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.