ஐபிஎல் 2025: கேகேஆரை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி!

Updated: Sun, May 25 2025 23:24 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற 68ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 32 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் டிராவிஸ் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசெனும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் தங்களுடையை அரைசதங்களை பூர்த்தி செய்ததுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 76 ரன்களை சேர்த்த கையோடு பெவிலியன் திரும்பினார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷானும் தனது பங்கிற்கு 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியில் பிரித்து மேய்ந்த ஹென்ரிச் கிளாசென் 37 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் என 104 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 278 ரன்களைச் சேர்த்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் சுனில் நரைன் இரண்டு விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு சுனில் நரைன் - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் அஜிங்கியா ரஹானேவும் 15 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான குயின்டன் டி காக்கும் 9 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ரமந்தீப் சிங் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

இறுதியில் அதிரடியாக விளையாடிய மனீஷ் பாண்டே 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களையும், ஹர்ஷித் ரானா 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களிலும் ஆட்டமிழக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் ஜெய்தேவ் உனாத்கட், ஈஷான் மலிங்கா மற்றும் ஹர்ஷ் தூபே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை