சிஎஸ்கே பேட்டர்களை தடுமாற வைத்த இளம் வீரர்; யார் இந்த விக்னேஷ் புதூர்?
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் இத்தொடர் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற இரு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தின.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுட்ன் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் பெரும்பாலான மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், தனது அறிமுக போட்டியில் விளையாடிய இளம் வீரர் ஒருவர் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். அதன்படி இப்போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக விளையாடிய விக்னேஷ் புதுர் எனும் அறிமுக வீரர் தனது முதல் போட்டியிலேயே அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி எதிரணிக்கு அழுத்ததை ஏற்படுத்தியுள்ளார்.
இப்போட்டியில் மொத்தமாக் 4 ஓவர்களை வீசிய அவர், 32 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் அவர் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே மற்றும் தீபக் ஹூடா என சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தார். இதன் காரணமாக இப்போட்டியின் முடிவுக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் பாராட்டுகளையும் பெற்ற்றார்.
இதனையடுத்து யார் இந்த விக்னேஷ் புதூர் என்ற கேள்விகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஏனெனில் தனது அறிமுக ஐபிஎல் ஆட்டத்தில், அழுத்த நிறைந்த சூழலிலும் சிறப்பாக பந்துவீசி எதிரணியை தடுமாற வைத்ததன் மூலம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். விக்னேஷ் புதூர் கேரள மாநிலம், மலபுரத்தை சேர்ந்தவர். இவர் கடந்தாண்டு கேரளா பிரீமியர் லீக் தொடரில் ஆலப்புழா அணிக்காக விளையாடி கவனத்தை ஈர்த்தார்.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ச் அணியானது ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது. பின்னர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று முடிந்த எஸ்ஏ20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியின் வலைபயிற்சி பந்துவீச்சாளராக, இவரைப் பயன்படுத்தியது. அங்கு அவர் ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கானுடன் இணைந்து தனது பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதனையடுத்து அவர் தற்போது ஐபிஎல் தொடரிலும் முதல் போட்டியிலேயே விளையாடும் வாய்ப்பை பெற்றதுடன், லெவனில் தனது இடத்தையும் உறுதிசெய்துள்ளார். இதனால் இனிவரும் போட்டிகளீல் விக்னேஷ் புதூர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பும் கிடைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.