ஐபிஎல் 2024 மினி ஏலம்: மொத்த வீரர்களில் 333 பேர் மட்டுமே தேர்வு; முதல் செட்டில் இடம்பிடித்த வீரர்கள் விபரம்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19 அன்று நடக்க உள்ள நிலையில், ஏலத்தில் பங்கேற்க உள்ள வீரர்களின் இறுதிப் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக 1,166 வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க தங்கள் பெயர்களை அளித்து இருந்தனர். அதில் தற்போது 333 வீரர்கள் மட்டுமே இறுதிப் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள். மீதமிருந்த 833 வீரர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
இது ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பங்கேற்கலாம் என்ற ஆசையில் பெரும் கனவுகளோடு தங்கள் பெயர்களை கொடுத்த பல இளம் வீரர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2024 ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. துபாயில் டிசம்பர் 19, 2023 அன்று கோகோ கோலா அரங்கில் நடக்க உள்ள ஏலத்தில் 333 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர் என கூறப்பட்டு இருக்கிறது.
மேலும், அந்த 333 வீரர்களில் 214 பேர் இந்தியர்கள் மற்றும் 119 வெளிநாட்டு வீரர்கள். இதில் 2 வீரர்கள் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதில் 116 வீரர்கள் சர்வதேச அனுபவம் உள்ள வீரர்கள். 215 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் இதுவரை விளையாடாத வீரர்கள். அவர்கள் தவிர அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 2 பேர். அதிகபட்சமாக பத்து ஐபிஎல் அணிகளிலும் சேர்த்து 77 இடங்களுக்கான ஏலம் நடைபெற உள்ளது. இதில் 30 வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் 2 கோடி என்பது அதிக அடிப்படை விலையாகும். அதன்படி 23 வீரர்கள் மிக உயர்ந்த விலையான 2 கோடியை தங்களுக்கான அடிப்படை விலையாக நிர்ணயம் செய்து இருக்கிறார்கள். 1.5 கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் 13 வீரர்கள் ஏலப் பட்டியலில் உள்ளனர். 2024 ஐபிஎல் மினி ஏலம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்குத் தொடங்கும் (துபாய்) - இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு ஏலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தின் முதல் செட்டில், ஹரி ப்ரூக், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், கருண் நாயர், மனிஷ் பாண்டே, ரோமன் பவல் மற்றும் ரைலி ரூசோவ் ஆகியோரும், இரண்டாவது செட்டில் பாட் கம்மின்ஸ், ஜெரால்ட் கோட்ஸி, ஹசரங்கா, டேரில் மிட்செல், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், ரச்சின் ரவீந்தரா, கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.