ஐபிஎல்லின் ஆரம்ப காலம் குறித்து பேசிய விராட் கோலி!

Updated: Tue, Feb 01 2022 22:01 IST
Image Source: Google

ஐபிஎல்லில் ஒரே அணிக்காக ஆடிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி. கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதிலிருந்து இப்போது வரை ஆர்சிபி அணியில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார்.

கடந்த 2008ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இளம் விராட்கோலியை ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது. அன்றிலிருந்து இன்றுவரை ஆர்சிபி அணியில் மட்டுமே விளையாடி வரும் விராட் கோலியின் இன்றைய ஐபிஎல் மதிப்பு ரூ.17 கோடி. 

கடந்த சில ஆண்டுகளாகவே அவரது விலை ரூ.17 கோடி தான். இதுதான் ஒரு வீரருக்கு ஐபிஎல் அணி கொடுக்கும் அதிகபட்ச தொகை. இப்போதுதான் அதை ஈடுகட்டியுள்ளார் கேஎல் ராகுல். லக்னோ அணி கேஎல் ராகுலை ரூ.17 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

விராட் கோலியின் வளர்ச்சியில் ஆர்சிபி அணியின் பங்கும் உள்ளது. ஆர்சிபி அணியுடன் இணைந்தே வளர்ந்துவந்துள்ளார் கோலி. 2013ஆம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி, ஒரு ஐபிஎல் கோப்பையை கூட ஆர்சிபிக்கு ஜெயித்து கொடுக்கவில்லை என்ற விமர்சனம் இருந்துவந்த நிலையில், 14ஆவது சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டார். இதனால் 15ஆவது சீசனுக்கு அந்த அணி புதிய கேப்டனை தேடிவருகிறது.

இந்நிலையில், ஐபிஎல் தொடங்கியபோது ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து பேசிய விராட் கோலி, “டெல்லி அணி ஆரம்பத்தில் என்னை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டியிருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் பவுலிங் யூனிட்டை வலுப்படுத்தும் முனைப்பில் என்னுடன் அண்டர் 19 அணியில் ஆடிய, எங்கள் அண்டர் 19 அணியின் நட்சத்திர பவுலரான இடது கை ஃபாஸ்ட் பவுலர் பிரதீப் சங்வானை ஏலத்தில் எடுத்தது. என்னை ஆர்சிபி அணி எடுத்தது. என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தருணமாக அதை நான் பார்க்கிறேன்” என்று கோலி தெரிவித்தார்.

கோலி தலைமையில் 2008இல் அண்டர் 19 உலக கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ரவீந்திர ஜடேஜா, சித்தார்த் கவுல், மனீஷ் பாண்டே, பிரதீப் சங்வான் உள்ளிட்ட நிறைய வீரர்கள், 2008 ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை