இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 84 ரன்களைச் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாம், ஃபகர் ஸ்மான் இணை அதிரடியாக விளையாடிய போதிலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

இந்நிலையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயராகும் வகையில் பாகிஸ்தான் தொடரை எதிர்கொண்டுள்ள இங்கிலாந்து அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் தொடரில் விளையாடுவதை காட்டிலும் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொட்ரில் விளையாடி இருந்தால் அவர்களுக்கு அது பயனளித்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த தங்களது அணி வீரர்களை திரும்ப அழைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தவறு செய்துவிட்டது என்று நினைக்கிறேன். வில் ஜேக்ஸ், பில் சால்ட், ஜோஸ் பட்லர் ஆகியோர் பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றனர். அங்கே அழுத்தம், அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம், எதிர்பார்ப்பு ஆகியவை இருக்கும். எனவே அங்கு விளையாடுவது பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடுவதை விட சிறந்ததாக இருக்கும்.

நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஆதரவாக இருக்கிறேன். ஆனால் ஐபிஎல் தொடர் அதிகப்படியான அழுத்தத்தை காட்டுகிறது. அங்கே ரசிகர்களின் அதிகப்படியான அழுத்தம், உரிமையாளர்கள், சமூக வலைதளம் போன்றவற்றுக்குள் வீரர்கள் தள்ளப்படுகின்றனர். இங்கே நான் பாகிஸ்தான் அல்லது இங்கிலாந்து அணியை அவமரியாதை செய்யவில்லை. அவர்கள் ஒன்றாக டி20 கிரிக்கெட்டில் அதிகம் விளையாடவில்லை. ஆனால் இங்கிருக்கும் தரத்தை விட ஐபிஎல் சிறந்தது” என தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News