இனி தொடரில் இருந்து விலகும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை; ஐபிஎல் அணிகள் எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதனால் எந்தெந்தந்த வீரர்கள் தக்கவைக்கப்படுவார்கள், வீரர்கள் ஏலத்தில் யாரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்ற விவாதங்கள் தொடங்கியுள்ளன. இது தொடர்பான ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது பல்வேறு விசயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட போதிலும், வெளிநாட்டு வீரர்கள் சிலர் அணியில் ஒப்பந்தமான நிலையில் தவறான காரணங்களை கூறி தொடரில் இருந்து விலகுவதை வாடிக்கையாக வைத்துள்ளது குறித்து பிரதானமாக பேசப்பட்டது. இதில் பல உரிமையாளர்கள் இந்த பிரச்சனை குறித்து தங்கள் கருத்தை தெரிவித்தனர், இந்த கூட்டத்திற்கு பிறகு பிசிசிஐ இந்த விஷயத்தில் கடுமையான முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விளையாட இருந்த இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் மற்றும் இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா போன்ற முக்கிய வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு அணிகளால் வாங்கப்பட்ட போது, அவர்கள் பின்னர் தொடரிலிருந்து விலகினர். சில வீரர்கள் குறைந்த ஏலத்தொகை காரணமாகவும், சிலர் காயங்கள் மற்றும் சிலர் குடும்ப காரணங்களுக்காகவும் போட்டியில் விளையாட மறுத்திருந்தனர்.
இந்நிலையில் தான் சரியான காரணங்களைக் கூறாமல் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐபிஎல் அணி உரிமையாளர்கள் பிசிசிஐயிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும் அதில் சிலர் இதுபோல் செயல்படும் வீரர்களை தடை செய்யவும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் இப்படி வீரர்கள் திடீரென தொடரில் இருந்து விலகுவதால் அணியின் நிலை தன்மை சீர்குலைவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இப்போடி அணி உரிமையாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்காத நிலையில், நிச்சயம் இனிவரும் காலங்களில் தவறான காரணங்களை கூறி தொடரில் இருந்து விலகும் வீரர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சமீபத்திய சீசன்களில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) ஐபிஎல் பிளே-ஆஃப்களுக்கு முன்பு இருதரப்பு போட்டிகளுக்கு வீரர்களை திரும்ப அழைத்தது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்த முடிவின் காரணமாக ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஐபிஎல் அணிகளில் இங்கிலாந்து வீரர்களால் பங்கேற்க முடியாமல் போனது. இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கூட தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார், ஐபிஎல்லின் போது இருதரப்பு தொடர்கள் எதுவும் திட்டமிடப்படக்கூடாது என்றும் பரிந்துரைத்தார். இதனால் வீரர்களை திரும்ப அழைக்கும் கிரிக்கெட் வாரியங்களிடமும் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.