ஐபிஎல் 2021: வீணான சாம்சன் சதம்; பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் தோல்வி!
பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீசத் தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ராகுல், தீபக் ஹூடா இணை அரைசதம் கடந்து அணி இமாலய இலக்கை நிர்ணையிக்க உதவினர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது.
பஞ்சாப் அணி தரப்பில் கே.எல்.ராகுல் 91 ரன்களையும், தீபக் ஹூடா 64 ரன்களையும், கிறிஸ் கெய்ல் 40 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் சேட்டன் சகரியா 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், மனன் வோரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த பட்லர், ஷிவம் தூபே, ரியான் பராக் ஆகியோரும் சீரான இடைவேளையில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் 12 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி சதமடித்து அசத்தினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சதமடித்த முதல் நபர் என்ற பெருமையையும், கேப்டானான முதல் போட்டியிலேயே சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் படைத்தார்.
அதன்பின் ஆட்டத்தின் கடைசி பந்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற 5 ரன்கள் தேவைப்பட்டது. இதனை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன், சிக்சர் அடிக்க முயற்சித்து தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.