இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி டப்ளினில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரிங்கு சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டனர்.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - ஆண்டி பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் கேப்டன் பும்ரா முதல் ஓவரை வீசினார். இதில் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய பால்பிர்னி அடுத்த பந்தில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய லோர்கன் டக்கரும் ரன்கள் ஏதுமின்றி அதே ஓவரில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 9 ரன்களிலும், ஹாரி டெக்டர் 9 ரன்களிலும், ஜார்ஜ் டக்ரேல் ஒரு ரன்னிலும், மார்க் அதிர் 16 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அயர்லாந்து அணி 59 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த கர்டிஸ் காம்பேர் - பேரி மெக்கர்த்தி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் 100 ரன்களைக் கடந்தது. அதன்பின் 39 ரன்களை எடுத்திருந்த கர்டிஸ் காம்பேர் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பேரி மெக்கர்த்தி 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என அரைசதம் கடந்ததுடன் 51 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.