IRE vs IND, 2nd T20I: ஹூடா அசத்தல் சதம், சாம்சன் அரைசதம்; அயர்லாந்துக்கு 226 டார்கெட்!

Updated: Tue, Jun 28 2022 23:22 IST
Image Source: Google

இந்தியா - அயர்லாந்து இடையேயான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டியிலும் வெற்றி பெற்று டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை சமன் செய்யும் முனைப்பில் அயர்லாந்து அணியும் களமிறங்கின.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் ஆடாததால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஆவேஷ் கானுக்கு பதிலாக ஹர்ஷல் படேலும், சாஹலுக்கு பதிலாக ரவி பிஷ்னோயும் சேர்க்கப்பட்டனர்.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் - இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷான் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் மார்க் அதிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் - தீபக் ஹூடா இணை பாரபட்சம் பார்க்காமல் அயர்லந்து பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். தொடர்ந்து இருவரும் பவுண்டரியும் சிக்சருமாக விளாச அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தங்களது முதல் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் முறையில் 176 ரன்களையும்ச் சேர்த்தனர். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 77 ரன்கள் சேர்த்த நிலையில் மார்க் அதிர் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். ஆனாலும் மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த தீபக் ஹூடா 55 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்தார்.

இதன்மூலம் சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோரைத் தொடர்ந்து இந்திய அணி தரப்பில் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த நான்காவது இந்திய வீரர் எனும் பெருமையையும் தீபக் ஹூடா பெற்றார். 

மறுமுனையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 105 ரன்கள் எடுத்திருந்த தீபக் ஹூடாவும் ஆண்டி மெக்பிரைனின் அபாரமான கேட்ச்சின் மூலம் ஆட்டமிழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக், அக்சர் படேல் ஆகியோர் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களைச் சேர்த்தது. 

அயர்லாந்து தரப்பில் மார்க் அதிர் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் லிட்டில், கிரேக் யங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை