IRE vs NZ, 1st ODI: ஹேரி டெக்டர் அதிரடி சதம்; நியூசிலாந்துக்கு 301 டார்கெட்!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டப்ளினில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங், கேப்டன் ஆண்ட்ரூ பால்பிரினி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஆண்டி மெக்பிரைன் - ஹேரி டெக்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். அதன்பின் 39 ரன்காளில் மெக்பிரைன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கர்டிஸ் கேம்பரும் 43 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார்.
ஆனாலும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹேரி டெக்டர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெக்டர் 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் சிமி சிங் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 30 ரன்களைச்சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களைச் சேர்த்தது.
நியூசிலாந்து தரப்பில் லோக்கி ஃபர்குசன், இஷ் சோதி, பிளைர் டிக்னர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.