IRE vs PAK, 2nd T20I: அயர்லாந்து பேட்டர்கள் அசத்தல்; பாகிஸ்தானுக்கு 194 ரன்கள் இலக்கு!
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முந்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றிய்யைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி டப்ளினில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில் பால் ஸ்டிர்லிங் 11 ரன்களுக்கும், ஆண்ட்ரூ பால்பிர்னி 16 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த லோர்கன் டக்கர் - ஹாரி டெக்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹாரி டெக்டர் அரைசதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கி சிறப்பாக விளையாடிய கர்டிஸ் காம்பெரும் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த லோர்கன் டக்கர் அரைசதம் கடந்த நிலையில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 51 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜார்ஜ் டக்ரெல் 15 ரன்களிலும், மார்க் அதிர் 9 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் ஏழாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கரெத் டெலானி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி 28 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், 193 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் அணி இப்போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் தொடரை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.