அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன.
இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று தொடங்கிய இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரியான் ரிக்கெல்டன் - டோனி டி ஸோர்ஸி இனை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸோர்ஸி 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டெம்பா பவுமா 4 ரன்களிலும், ரஸ்ஸி வேண்டர் டுசென் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 39 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ரிக்கெல்டனுடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களையும் கடந்து அசத்தினர்.
மேற்கொண்டு இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 152 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய நிலையில், தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் ரிக்கெல்டன் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 91 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 79 ரன்களை எடுத்த நிலையில் விக்கெடை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜோர்ன் ஃபோர்டுயின் 28 ரன்களையும், லுங்கி இங்கிடி 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை மட்டுமே சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்க் அதிர் 4 விக்கெட்டுகளையும், கிரெய்க் யங் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணியில் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 2 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஆண்ட்ரூ பால்பிர்னி மற்றும் கார்டிஸ் காம்பேர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் இருவரும் தலா 20 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஜார்ஜ் டக்ரேல் 21 ரன்களையும், ஆண்டி மெக்பிரைன் 14 ரன்களையும், மார்க் அதிர், கிரேய் யங் ஆகியோர் தலா 12 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அயர்லாந்து அணியானது 31.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லிசாத் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொடு லுங்கி இங்கிடி மற்றும் ஜோர்ன் ஃபோர்டுயின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஓட்னியல் பார்ட்மேன் மற்றும் வியான் முல்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 139 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த ரியான் ரிக்கெல்டன் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.