அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று தொடங்கியது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமார் - ரியான் ரிக்கெல்டன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் ரிக்கெல்டன் 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரர் டெம்பா பவுமா 35 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் இணைந்த ரஸ்ஸி வேண்டர் டுசென் மற்றும் கைல் வெர்ரைன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் வேண்டர் டுசென் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கைல் வெர்ரைன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
மேலும் அவருடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 65 ரன்களைச் சேர்த்திருந்த கைல் வெர்ரைன் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வியான் முல்டரும் பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். மேலும் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வியான் முல்டர் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 110 ரன்களைக் குவித்திருந்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 343 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் கிரேய்க் யங், கர்டிஸ் காம்பேர், ஆண்டி மெக்பிரைன், கவின் ஹோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து அயர்லாந்து அணி 344 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி விளையாடவுள்ளது.