அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. அந்தவகையில் ஜூலை 25ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் டாஸை வென்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் பிரின்ஸ் மஸ்வாரே 74 ரன்களையும், ஜெய்லார்ட் கும்பி 49 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பேரி மெக்கர்தி மற்றும் ஆண்டி மெக்பிரையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மார்க் அதிர் 2 விக்கெட்டுகளையும், கிரெய்க் யங், கர்டிஸ் காம்பேர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்க இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணிக்கு பீட்டர் மூர் - கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பால்பிர்னி 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கர்டிஸ் காம்பேர் 8 ரன்களுக்கும், ஹாரி டெக்டர் 4 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுமுனையில் அரைசதம் கடந்து அசத்திய பீட்டர் மூர் 11 பவுண்டரிகளுடன் 79 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் பால் ஸ்டிர்லிங் 22 ரன்களையும், ஆண்டி மெக்பிரையன் 28 ரன்களையும், மேத்யூ ஹம்ப்ரேஸ் 27 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக அயர்லாந்து அணி இரண்டாம் நாள் அட்டநேர முடிவுக்கு முன்னேரே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெஸிங் முசரபானி, தனகா ஷிவாங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டெண்டாய் சடாரா, சீன் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 40 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஜெய்லார்ட் கும்பி - பிரின்ஸ் மஸவாரே ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜெய்லார்ட் கும்பி 7 ரன்களையும், பிரின்ஸ் மஸவாரே 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 28 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஜிம்பாப்வே அணி இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.