அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. அந்தவகையில் ஜூலை 25ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் டாஸை வென்ற அயர்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் பிரின்ஸ் மஸ்வாரே 74 ரன்களையும், ஜெய்லார்ட் கும்பி 49 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பேரி மெக்கர்தி மற்றும் ஆண்டி மெக்பிரையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மார்க் அதிர் 2 விக்கெட்டுகளையும், கிரெய்க் யங், கர்டிஸ் காம்பேர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அயர்லாந்து அணிக்கு பீட்டர் மூர் 79 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெஸிங் முசரபானி, தனகா ஷிவாங்கா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், டெண்டாய் சடாரா, சீன் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 40 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி 197 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அயர்லாந்து அணி தரப்பில் ஆண்டி மெக்பிரையன் 4 விக்கெட்டுகளையும், மார்க் அதிர், கிரேக் யங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் அயர்லாந்து அணிக்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சி காத்திருந்தது. அணியின் டாப் ஆர்டர் வீரர்களான பீட்டர் மூர், கர்டிஸ் காம்பேர், ஹேரி டெக்டர் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி ரிச்சர்ட் ங்கரவா பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர்.
அவர்களைத்தொடர்ந்து நட்சத்திர வீரர்களான கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி 4 ரன்களுக்கும், பால் ஸ்டிர்லிங் 10 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அயர்லாந்து அணியானது 21 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த லோர்கன் டக்கர் - ஆண்டி மெக்பிரையன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்மூலம் அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்களை எடுத்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை லோர்கன் டக்கர் 9 ரன்களுடனும், ஆண்டி மெக்பிரைன் 4 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இதில் இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டாத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. மேற்கொண்டு இருவரும் அரைசதங்களை கடந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். பின் 56 ரன்க்ளில் லோர்கன் டக்கர் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டைமிழக்காமல் இருந்த ஆண்டி மெக்பிரைன் 55 ரன்களையும், மார்க் அதிர் 24 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் அயர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஆண்டி மெக்பிரையன் ஆட்ட்நாயகன் விருதை வென்றார்.