டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றி; இந்தியாவை ஓவர்டெக் செய்த அயர்லாந்து!

Updated: Sat, Mar 02 2024 14:41 IST
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றி; இந்தியாவை ஓவர்டெக் செய்த அயர்லாந்து! (Image Source: Google)

ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அயர்லாந்து அணியும் ஆரம்பத்தில் சொதப்பினாலும், பால் ஸ்டிர்லிங், லோர்கன் டக்கர், ஆண்டி மெக்பிரையன் ஆகியோரது ஆட்டத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 263 ரன்களைச் சேர்த்ததுடன், முதல் இன்னிங்சில் 108 ரன்கள் முன்னிலையும் பெற்றது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஃப்கான் அணி மீண்டும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 218 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

இதன்மூலம் அயர்லாந்து அணிக்கு 111 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  இலக்கை துரத்தி களமிறங்கிய அயர்லாந்து அணியில் மூர் மற்றும் கர்டிஸ் காம்பேர் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய ஹாரி டெக்டர் 2 ரன்களுக்கும், பால் ஸ்டிர்லிங் 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி - லோர்கன் டக்கர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தி வந்தனர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரூ பால்பிர்னி அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் அயர்லாந்து அணி 31.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் அயர்லாந்து அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியைப் பெற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதன்படி தனது 8ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள அயர்லாந்து அணி தங்களது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. அதேசமயம் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்ய 25 டெஸ்ட் போட்டிகளை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட் வெற்றியை பெற அணிகள் எடுத்துக்கொண்ட போட்டிகள்

  • ஆஸ்திரேலியா - முதல் போட்டியில்
  • இங்கிலாந்து - 2 போட்டிகள்
  • பாகிஸ்தான் - 2 போட்டிகள்
  • ஆஃப்கானிஸ்தான் - 2 போட்டிகள்
  • வெஸ்ட் இண்டீஸ் - 6 போட்டிகள்
  • அயர்லாந்து - 8 போட்டிகள்
  • ஜிம்பாப்வே - 11 போட்டிகள்
  • தென் ஆப்பிரிக்கா - 12 போட்டிகள்
  • இலங்கை - 14 போட்டிகள்
  • இந்தியா - 25 போட்டிகள்
  • வங்கதேசம் -  35 போட்டிகள்
  • நியூசிலாந்து - 45 போட்டிகள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை