CWC 2023 Qualifiers: நேபாளத்தை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
ஜிம்பாப்வேவியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது இடத்திற்கான ஆட்டத்தில் அயர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய நேபாள் அணியில் குஷால் புர்டல் 8 ரன்களுக்கும், மல்லா 7 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த அர்ஜுன் சௌத் - ரோஹித் படேல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதத்தை நெருங்கிய அர்ஜுன் சௌத் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து ரோஹித் படேல் 29 ரன்களுக்கும், பிம் ஷார்கி 20 ரன்களிலும், குஷால் மல்லா 44 ரன்களுக்கும்,சந்தீப் லமிச்சானே 32 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய குல்சன் ஜா அரைசதம் கடந்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் நேபாள் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங் 15, ஆண்டி மெக்பிரைன் 17, ஆண்ட்ரூ பால்பிர்னி ஒரு ரன்னிலும், லோகர் டக்கர் 24 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஹாரி டெக்டர் - கர்டிஸ் காம்பெர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 60 ரன்களில் டெக்டரும், 62 ரன்களில் கம்பேரும் விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜார்ஜ் டக்ரேலும் 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இருப்பினும் கார்த் டெலானி, மார்க் அதிர் ஆகியோர் அணிக்கு தேவையான ரன்களை சேர்த்தானர். இதன்மூலம் அயர்லாந்து அணி 49.2 ஓவர்களில் இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.