5 பந்துகளில் 5 விக்கெட்டுகள்; புதிய சாதனை படைத்த கர்டிஸ் காம்பெர்!
Curtis Campher 5 Wicket in 5 Balls: தொழில் முறை கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை அயர்லாந்து வேகாப்பந்து வீச்சாளர் கர்டிஸ் கேம்பர் படைத்துள்ளார்.
அயர்லாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 தொடரான இன்டர்-புரோவின்சியல் தொட்ரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் முன்ஸ்டர் மற்றும் நார்த் வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற முன்ஸ்டர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கர்டிஸ் காம்பேர் 44 ரன்களையும், பீட்டர் மூர் 35 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நார்த் வெஸ்ட் வாரியர்ஸ் அணியில் ஸ்காட் மெக்பெத் 33 ரன்களையும், கேப்டன் ஆண்டி மெக்பிரைன் 29 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 13.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்ஸ்டர் அணி தரப்பில் கர்டிஸ் காம்பெர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் முன்ஸ்டர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் கர்டிஸ் காம்பெர் 2.3 ஓவர்களை வீசி 16 ரன்களை மட்டுமே கொடுத்ததுடன் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அதன்படி இப்போட்டியின் 12ஆவது ஓவரை வீசிய அவர் கடைசி இரண்டு பந்துகளில் ஜாரெட் வில்சன் மற்றும் கிரஹாம் ஹூம் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், தனது அடுத்த ஓவரில் ஆண்டி மெக்பிரைன், ரோபி மில்லர் மற்றும் ஜோஷ் வில்சன் ஆகியோரது விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
Also Read: LIVE Cricket Score
இதன் மூலம் தொழில் முறை கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வீரர் எனும் தனித்துவ சாதனையை கர்டிஸ் காம்பெர் படைத்துள்ளார். முன்னதாக மகளிர் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே வீராங்கனை கெலிஸ் நத்லோவ் இந்த சாதனையை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையையும் கர்டிஸ் காம்பெர் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.