இந்திய அணிக்கு இந்த 4 வீரர்கள் சவாலாக இருப்பார்கள் - இர்ஃபான் பதான்!
2023 புது வருடத்தில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில் முதலில் டி20 தொடர் ஜனவரி 3ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்குகிறது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு அடுத்து இலங்கை அணி உடன் ஒரு நாள் தொடர் நடக்க இருக்கிறது. இந்த இரு தொடர்களுமே எதிர்கால இந்திய வெள்ளைப்பந்து அணியை யார் தலைமையில் அமைப்பது எப்படி அமைப்பது என்பதற்கான வெள்ளோட்டமாக பார்க்கப்படுகிறது.
வெளிப்படையாக இல்லாமல் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் இந்திய டி20 அணியில் தாங்களாகவே இடம்பெறாமல் இருக்கிறார்கள். விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் முதலில் நடைபெற உள்ள டி20 தொடர் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இர்பான் பதான், “இலங்கை அணி ஒன்றும் அவ்வளவு மோசமான அணி இல்லை. அவர்கள் ஆசிய கோப்பையில் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதை நாம் பார்த்தோம். அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
குசல் மெண்டிஸ், ஹசரங்கா மற்றும் லகிரு குமாரா,அபாயகரமான அதிரடி பேட்ஸ்மேன் கேப்டன் சனகா ஆகியோர் ஹர்திக் பாண்டியாவுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பார்கள். ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா எப்படி கேப்டன்சி செய்தார் என்பதை பார்த்தோம். ஐபிஎல் அணிக்கோ அல்லது இந்திய அணிக்கோ அவர் கேப்டன்ஷி செய்யும் பொழுது அணி வீரர்களுடன் அவரது தொடர்பு நன்றாக இருந்தது.
அவர் மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்டார். அவரது கேப்டன்ஷியில் அவரது அணுகுமுறை ஈர்க்கும் முறையில் இருந்தது. அவரை நீண்ட கால கேப்டனாக மாற்றுவதாக இருந்தால் அவரது உடல் தகுதி குறித்தும் அக்கறை கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.