சஞ்சு சாம்சன் இடத்தில் இருந்திருந்தால் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருப்பேன் - இர்ஃபான் பதான்!
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோத இருக்கின்ற மூன்று ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிகளில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் கேஎல் ராகுல் இந்திய அணியை வழிநடத்துகிறார்.
மேலும் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த இருக்கும் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மாவிற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்திய அணியின் மூத்த ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இளம் ஆன்றவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்
ஆனால் சமீப காலமாக இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இடம் பெறவில்லை. உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த சஞ்சு சாம்சன் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கேஎல் ராகுலுக்கு மாற்றுவீராக இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். ராகுல் அணிக்கு திரும்பியதும் சஞ்சு சாம்சன் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்திய போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி இருந்த போதும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது பலரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இது குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சஞ்சு சாம்சன் மிகவும் வேதனையாக இருப்பார் என தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருக்கும் இர்ஃபான், “நான் சஞ்சு சாம்சன் இடத்தில் இருந்திருந்தால் அணியில் இடம்பெறாததற்கு மிகவும் ஏமாற்றம் அடைந்து இருப்பேன்” என பதிவிட்டு இருக்கிறார்.
இந்திய அணிக்காக 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் சஞ்சு சாம்சன் 390 ரன்கள் குவித்திருக்கிறார். இவரது ஒரு நாள் போட்டியின் சராசரி 55.71. இதில் மூன்று அரை சதங்களும் அடங்கும். இவர் கடைசியாக விளையாடிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 41 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை தரக்கூடிய ஒன்று என இஃர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் உலகக்கோப்பை போட்டி தொடர்களில் இடம் பெற்று இருக்கும் சூர்யகுமார் யாதவ் இதுவரை 27 போட்டிகளில் விளையாடி 538 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும். இவரது ஒரு நாள் போட்டியின் சராசரி 24.41. ஆசிய கோப்பை போட்டி தொடர்களில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடிய இவர் 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். நீண்ட காலமாக சூர்யகுமார் யாதவ் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக செயல்படாவிட்டாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவது பேசுபொருளாக மாறியுள்ளது.