நமன் ஓஜாவின் சாதனையை சமன்செய்த இஷான் கிஷன்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்த நிலையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அஷூதோஷ் சர்மா இணை பொறுப்புடன் விளையாடியதுடன் இருவரும் தலா 41 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியானது கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணி அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷான் அற்புதமாக பீல்டிங்கின் மூலம் தனது பெயரில் ஒரு சிறப்பு சாதனையைப் பதிவு செய்துள்ளார். அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இன்னிங்ஸில் விக்கெட் கீப்பிங் செய்யும் போது இஷான் நான்கு கேட்சுகளைப் பிடித்தார். அதிலும் குறிப்பாக எதிரணியின் டாப்-4 ஆர்டர் வீரர்கள் கருண் நாயர், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரெல் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் கேட்சுகளை பிடித்திருந்தார்.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் எதிரணியின் முதல் 4 பேட்ஸ்மேன்களின் கேட்சுகளைப் பிடித்த முதல் வீரர் என்ற பெருமையை இஷான் பெற்றுள்ளார். இதுதவிர்த்து இப்போட்டியில் இஷான் கிஷான் 4 கேட்சுகளை பிடித்தன் மூலம் நமன் ஓஜாவின் சாதனையையும் சமன்செய்துள்ளார். முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணியின் நமான் ஓஜா 4 கேட்சுகளை எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை இஷான் கிஷான் சமன்செய்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்சுகள் எடுத்த விக்கெட் கீப்பர்.
- இஷான் கிஷன் - 4 கேட்சுகள் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், 2025
- நமன் ஓஜா - 4 கேட்சுகள் vs மும்பை இந்தியன்ஸ், 2016
- நமன் ஓஜா - 3 கேட்சுகள் vs ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், 2016
- ஜானி பேர்ஸ்டோவ் - 3 கேட்சுகள் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், 2019