இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்டவர் இஷான் கிஷான். கடந்தாண்டு வரை இந்திய அணியின் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இடம்பிடித்து விளையாடி வந்த இஷான் கிஷான், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகினார். இருப்பினும் இஷான் கிஷானை உள்ளூர் போட்டிகளில் விளையாடும் படி பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது.
ஆனால் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க மறுத்த இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கெண்டதும், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்ததன் காரணமாக கோபமடைந்த பிசிசிஐ அவர்கள் இருவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கெண்டதன் விளைவாக இந்திய அணியின் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.
மேற்கொண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் இஷான் கிஷன் பெரிதளவில் சோபிக்கமால் இருந்ததன் காரணமாக, மீண்டும் அவர் இந்திய அணிக்கு தேர்வாவது சந்தேகம் தான் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ள துலீப் கோப்பை தொடரில் ஜார்கண்ட் மாநில அணிக்காக இஷான் கிஷான் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த அணியின் கேப்டனாகவும் அவர் செயல்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இஷான் கிஷானின் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணமானது, இந்திய அணி தேர்வுக் குழுவைச் சேர்ந்த சிலர் இஷான் கிஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் கொடுத்த அறிவுரையின் அடிப்படையிலேயே தற்சமயம் இஷான் கிஷான் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிகிறது. ஒருவேளை அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணிக்காக மீண்டும் தேர்வாக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்காக கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகமான இஷான் கிஷான் இதுநாள் வரை, 2 டெஸ்ட், 27 ஒருநாள் மற்றும் 32 டி20 போட்டிகளில் விளையாடி 1700க்கும் மேற்பட்ட ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதத்தை விளாசிய வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.