வர்ணனையாளராக களமிறங்கும் இஷாந்த் சர்மா!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் இஷாந்த் சர்மா. உலகின் தலைசிறந்த பேட்டரான ரிக்கி பாண்டிங்கின் விக்கெட்டினை 19ஆவது வயதிலேயே எடுக்கும் போது இஷாந்த் சர்மா மீது கிரிக்கெட் ரசிகர்கள் பார்வை விழுந்தது. இந்தியாவில் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய 2ஆவது வேகப்பந்து வீச்சாளரும் இவரேதான்.
இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா 311 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2021ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பில்லாமல் இருக்கிறார். அதேபோல் 80 ஒருநாள், 105 டெஸ்ட், 14டி20 போட்டிகள் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா முதன்முறையாக வர்ணணையாளராக களமிறங்க உள்ளார்.
தற்போது, 34 வயதான இஷாந்த் சர்மா இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் ஹிந்தி வர்ணனையாளராக செயல்பட உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளதை பற்றியும் டெஸ்ட் கிரிக்கெட் குறித்தும் பேசுவார் என ஜியோ சினிமாஸ் தெரிவித்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை 12ஆம் தேதி தொடங்குகிறது. ஓய்விற்குப் பிறகு வர்ணனையாளராக செயல்படுவதே வழக்கமாக இருந்தாலும் சில வீரர்கள் ஓய்வுக்கு முன்னமே வர்ணனை செய்துள்ளனர். ஏற்கனவே, தினேஷ் கார்த்திக் இதுபோல வர்ணனையாளராக செயல்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.