பிஎஸ்எல் 2024: கடைசி பந்து வரை சென்ற போட்டி; முல்தானை வீழ்த்தி சாம்பியனான இஸ்லாமாபாத்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்த்து, ஷதாக் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர் யசிர் கான் 6 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய டேவிட் வில்லி 6 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த கேப்டன் முகமது ரிஸ்வான் - உஸ்மான் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார்.
அதன்பின் 26 ரன்களில் முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்த இலையில் 57 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய இஃப்திகார் அஹ்மாத் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 32 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க, மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்தது. இஸ்லாமாபாத் யுனைடெட் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய இமாத் வசிம் 5 விக்கெட்டுகளையும், கேப்டன் ஷதாப் கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு மார்ட்டின் கப்தில் - காலின் முன்ரோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர்.
அதன்பின் காலின் முன்ரோ 17 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அகா சல்மான் 10 ரன்களுக்கும், கேப்டன் ஷதாப் கான் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த மார்ட்டின் கப்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 50 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய அசாம் கான் தனது பங்கிற்கு 30 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹைதர் அலி 5 ரன்களுக்கும், ஃபஹீம் அஷ்ரஃப் ஒரு ரன்னிலும், நஷீம் ஷா 17 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் அடுத்து களமிறங்கிய ஹுனைன் ஷா கடைசி பந்தில் பவுண்டரி விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதித்துள்ளது. மேலும் இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த இமாத் வசிம் ஆட்டநாயகன் விருதையும், தொடர் முழுவது சிறப்பாக செயல்பட்ட ஷதாப் கான் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.