இந்தியா - பாகிஸ்தான் போட்டியை மொத்த உலகமும் எதிர்பார்க்கிறது - பாபர் அசாம்!

Updated: Mon, Jun 03 2024 08:53 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் மொத்தம் 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் இதில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன.

அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்கொண்டுள்ள பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஏனெனில் கடந்தாண்டு இறுதிப்போட்டிவரை முன்னேறிய பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இத்தொடரை எதிர்கொண்டுள்ளது. 

இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியை எதிர்கொள்வது குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம், “சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போதுமே அதிகம் பேசப்படும் ஒரு போட்டியாக உள்ளது. உலகில் எங்கு சென்றாலும் இந்த போட்டி குறித்து அதிகமாக விவாதிக்கப்படுகிறது. அதனால் வீரர்களும் இப்போட்டியில் விளையாடுவதற்காக உற்சாகமாக உள்ளனர். என்ன நடக்கும் என்றால் எல்லோரும் அவரவர் நாட்டை ஆதரிப்பதால் இந்த போட்டியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நாளில் உலகமே இதன் மீது கவனம் செலுத்துகிறது. அதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பும்,  ரசிகர்களின் ஆவலும் கொஞ்சம் வீரர்களுக்கு பதற்றத்தை உருவாக்குகிறது. பதற்றத்தை எப்படி சிறப்பாக கையாள்கிறீர்கள், அடிப்படை விஷயங்களில் எப்படி துல்லியமாக கவனம் செலுத்துகிறீர்கள் என்பதில் தான் ஒரு வீரராக உங்களை இயல்பாக வைத்திருக்க உதவும்.

இது மிகப்பெரிய அழுத்தம் நிறைந்த போட்டி. பதற்றமின்றி தொடர்ந்து அமைதியான மனநிலையில் இருந்து, உங்களது திறமை மீது நம்பிக்கை வைத்து உழைத்தால் எல்லாமே எளிதாகி விடும். இது தான் சக வீரர்களுக்கு வழங்கும் அறிவுரையாகும். என்னைப் பொறுத்தவரை, 2022 இல் நாங்கள் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்க வேண்டும், ஆனால் அவர்கள் எங்களிடம் இருந்து வெற்றியைத் தட்டிச்சென்றனர்.

அதேபோல் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தோல்வி மிகவும் வேதனையானது. மேலும் இறுதிப் போட்டியில், ஷஹீன் அஃப்ரிடியின் காயம் எங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது, ஏனெனில் அந்த நேரத்தில், இங்கிலாந்து அணியின் மீது அழுத்தம் இருந்தது. ஆனால் அச்சமயத்தில் நாங்கள் ஒரு ஸ்பின்னருக்கு ஓவர் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். அது தான் ஆட்டத்தின் முடிவையும் மாற்றிவிட்டது.” என்று தெரிவித்துள்ளார். 

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணியானது தங்களது முதல் லீக் ஆட்டத்தை ஜூன் 6ஆம் தேதி அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் ஆட்டம் ஜூன் 09ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை