ஐபிஎல் 2022: ரோஹித்திற்கு அட்வைஸ் வழங்கிய வெட்டோரி!
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி படுமோசமாக ஆடி தொடர் தோல்விகளை தழுவிவருகிறது. இதுவரை ஆடிய 7 போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸின் தோல்விகளுக்கு, அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும் கேப்டனுமான ரோஹித் சர்மா சோபிக்காதது தான் காரணம். இதுவரை ஆடிய 7 போட்டிகளிலும் சேர்த்தே மொத்தமாக வெறும் 114 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் ரோஹித் சர்மா.
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டக் அவுட்டானதையடுத்து, ஐபிஎல்லில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா ஃபார்மில் இல்லாமல் படுமோசமாக பேட்டிங் ஆடிவரும் நிலையில், டேனியல் வெட்டோரி ரோஹித்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
ரோஹித் குறித்து பேசிய டேனியல் வெட்டோரி, “3 அல்லது 4ஆம் வரிசையிலும் ஆடவல்ல பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் இருந்துகொண்டு அவரது பேட்டிங் ஆர்டரை கீழே இறக்கிக்கொள்வது கடினம்தான். ஆனால் இதுமாதிரியான சூழல்களில் அவர் பேட்டிங் ஆர்டரில் கீழே இறங்குவதை பெரிதாக பொருட்படுத்திக்கொள்ளாமல் இறங்குவது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா 4ஆம் வரிசையில் இறங்கி கடந்த காலங்களில் அபாரமாக விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.