தனது பதவிக்காலத்தில் சந்தித்த மிகவும் கடினமான தருணம் இதுதான் - மிக்கி ஆர்தர்!
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற தவறியது. பாகிஸ்தான் அணியின் மீதும் அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாமின் மீதும் அணியின் முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் பாபர் ஆசாம் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது உள்பட அதிரடியாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும் பாகிஸ்தான் அணியின் புதிய இயக்குநராக இருந்த மிக்கி ஆர்தரும் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அகமதாபாதில் நடைபெற்ற போட்டியே தனது பதவிக்காலத்தில் சந்தித்த மிகவும் கடினமான தருணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் இயக்குநர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “உலகக் கோப்பையில் அகமதாபாதில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானுக்கு ஆதரவே இல்லை. அந்த சூழலில் விளையாடுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாட ஆதாரமாக இருந்தது ஹோட்டலில் இருந்து வரும்போது அவர்களுக்கு கிடைத்த ஆதரவும், மைதானத்தில் அவர்களுக்கு கிடைத்த ஆதரவுமே.
ஆனால், அஹ்மதாபாத் மைதானத்தில் எங்களுக்கு கொஞ்சம் கூட ஆதரவு இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான சூழல் நிலவியதால் அந்தப் போட்டியில் விளையாடுவதே மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும், பாகிஸ்தான் வீரர்கள் இதையெல்லாம் காரணமாக கூறாமல் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர்” என்று தெரிவித்துள்ளார்.