ரஞ்சி கோப்பை 2025: ஜம்மு காஷ்மீர் அணி சாதனை வெற்றி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் குரூப் டி பிரிவில் இடம் பிடித்துள்ள ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 64 ரன்களையும், ஆயுஷ் தொசெஜா 65 ரன்களையும், சுமித் மாதுர் 55 ரன்களையும் சேர்த்தனர். ஜம்மு காஷ்மிர் தரப்பில் அகிப் நபி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜம்மு காஷ்மிர் அணியில் கேப்டன் பாரஸ் தோக்ரா சதமடித்து அசத்தியதுடன் 106 ரன்களையும், அப்துல் சமத் 85 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்ஸில் 310 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையிலும், 99 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. டெல்லி தரப்பில் சிமர்ஜீத் சிங் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் பின்னிலையுடன் இன்னிங்ஸைத் தொடர்ந்த டெல்லி அணியில் கேப்டன் அயூஷ் பதோனி மற்றும் ஆயுஷ் தொசெஜா ஆகியோர் அரைசதங்களைக் கடந்ததுடன், அணியை முன்னிலையும் படுத்தினர்.
பின்னர் ஆயுஷ் பதோனி 72 ரன்களிலும், ஆயுஷ் தொசெஜா 62 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு அர்பித் ரானா 43 ரன்களையும், சனத் சங்வான் மற்றும் யாஷ் துல் ஆகியோர் தலா 34 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் டெல்லி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 277 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ஜம்மு காஷ்மீர் தரப்பில் வன்ஷஜ் சர்மா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் அணிக்கு 177 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய காம்ரன் இக்பால் இறுதிவரை அட்டமிழக்காமல் சதமடித்து அசத்தியதுடன், 20 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 133 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
Also Read: LIVE Cricket Score
இந்த வெற்றி மூலமாக ஜம்மு காஷ்மீர் அணி ரஞ்சி கோப்பை வரலாற்றில் டெல்லி அணியை முதல் முறையாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகிப் நபி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் அணி நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் தங்களுடைய இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.